பலாலி விமான நிலையத்தில் நடராஜர் சிலையை நிறுவ நடவடிக்கை எடுங்கள்: அமைச்சர் சந்திரசேகரனிடம் இந்துமத பீடம் அவசர வேண்டுகோள்!

0
56

யாழ். பலாலி சர்வதேச விமான நிலையத்தில் நடராஜர் சிலை ஒன்றை ஸ்தாபிப்பதற்கு முன்நின்று உழைக்குமாறு, வடமாகாண ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் அமைச்சருமான சந்திரசேகரனிடம் இந்துமத பீடம் உத்தியோகபூர்வ வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்துமத பீடத்தின் செயலாளர் கலாநிதி சிவஸ்ரீ ராமசந்திர குருக்கள் பாபு சர்மா விடுத்துள்ள விசேட ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

புராண வரலாற்றுப் பின்னணி

யாழ். மாவட்டம் என்பது இந்து மக்கள் செறிந்து வாழும் ஒரு ஆன்மீக பூமியாகும். குறிப்பாக, பலாலி விமான நிலையத்திற்கு மிக அருகாமையிலேயே வரலாற்றுப் புகழ்பெற்ற, புராண பின்னணியைக் கொண்ட கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இத்தகைய புண்ணிய பூமியின் நுழைவாயிலாக விளங்கும் பலாலி விமான நிலையத்தில் நடராஜர் சிலையை நிறுவுவது ஆன்மீக ரீதியாகவும் கலாசார ரீதியாகவும் மிக முக்கியமானதாகும்.

அமைச்சரின் கைகளால் திறப்பு விழா

தமிழ் மக்களுக்கு உண்மையான சேவை செய்ய வேண்டும் என்று நினைக்கும் அமைச்சர் சந்திரசேகரன் அவர்கள், இந்த விடயத்தில் தனிப்பட்ட ரீதியில் கவனம் செலுத்த வேண்டும். அவரே முன்னின்று, இதற்குரிய அனுமதிகளைப் பெற்று, சிலையை நிறுவி, தனது கரங்களாலேயே அதனைத் திறந்து வைக்க வேண்டும் என இந்து மக்கள் எதிர்பார்க்கின்றனர். இதன் மூலம் ஒட்டுமொத்த இந்து மக்களின் மனங்களையும் அவரால் வெல்ல முடியும்.

மக்களின் ஆதரவைப்பெற அரிய வாய்ப்பு

தற்போதைய ஜனாதிபதியும் வட பகுதி மக்கள் மீது மிகுந்த அக்கறை கொண்டு, அவர்களின் மனங்களை வெல்வதற்கான பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். இந்தச் சூழ்நிலையில், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராகவும் அமைச்சராகவும் இருக்கும் சந்திரசேகரன் அவர்கள், பலாலி விமான நிலையத்தில் நடராஜர் சிலையை அமைப்பதன் மூலம் தமிழ் மக்களின் பெருமதிப்பை முழுமையாகப் பெற முடியும். இது வெறும் ஆன்மீகப் பணி மட்டுமல்லாது, வரும் காலங்களில் தமிழ் மக்களின் பேராதரவையும் வாக்குகளையும் பெற்றுக்கொள்வதற்கும் ஒரு பலமான அடித்தளமாக அமையும் என கலாநிதி சிவஸ்ரீ ராமசந்திர குருக்கள் பாபு சர்மா தனது வேண்டுகோளில் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here