தம்பலகாமம் – கிண்ணியா வீதியில் உடைந்துள்ள நீர் குழாய்: டெங்கு அபாயத்துடன் இலட்சக்கணக்கான லீட்டர் தண்ணீர் வீணாகும் அவலம்!

0
5

தம்பலகாமம் – கிண்ணியா செல்லும் பிரதான வீதியின் பொட்கனி பகுதியில், கடந்த பல மாதங்களாக குடிநீர் குழாய் உடைந்து நீர் வீணாகச் சென்றுகொண்டிருப்பதுடன், இதனால் அப்பகுதியில் டெங்கு பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இவ்விடயம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

குறித்த பகுதியில் உடைந்துள்ள நீர் குழாயிலிருந்து வெளியேறும் குடிநீர், நீண்டகாலமாக வீதியோரக் கானில் தேங்கி நிற்கிறது. தற்போதைய வறட்சியான காலநிலையிலும், நாள்தோறும் இலட்சக்கணக்கான லீட்டர் குடிநீர் இவ்வாறு வீணாகப் போவதுடன், தேங்கிக் கிடக்கும் நீரினால் அப்பகுதியில் டெங்கு நோய் பரவக்கூடிய தீவிர அச்சநிலையும் உருவாகியுள்ளது.

இது தொடர்பாக தம்பலகாமம் நீர்ப்பாசனத் திணைக்களம், தம்பலகாமம் பிரதேச சபை மற்றும் தம்பலகாமம் சுகாதாரத் துறையினருக்கு (சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனை) பொதுமக்கள் தரப்பிலிருந்து எழுத்து மூலம் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த மாதம் கூட சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் மீண்டும் இது குறித்துத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும், முறைப்பாடுகள் செய்யப்பட்டு நீண்ட நாட்களாகியும் இதுவரை எந்தவொரு அதிகாரியும் இப்பகுதிக்கு வருகை தந்து பார்வையிடவோ அல்லது குழாயைச் சீரமைக்கவோ எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கிராம மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

எனவே, பொதுமக்களின் ஆரோக்கியத்தைக் கருத்திற்கொண்டும், அத்தியாவசியமான குடிநீர் வீணாவதைத் தடுக்கும் பொருட்டும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு இந்த நீர் கசிவைச் சீரமைக்க முன்வர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here