சர்வதேச கிரிக்கெட் பேரவையில் (ICC) பெண் கிரிக்கெட் வீராங்கனைகளுக்காக ‘பிரசவத்திற்குப் பின் மீண்டும் விளையாட திரும்புதல்’ என்ற புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
பெண் கிரிக்கெட் வீராங்கனைகள் தாய்மைக்குப் பிறகும் தங்களது விளையாட்டு வாழ்க்கையைத் தொடர ஆதரவளிக்கும் வகையில் இந்த முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது பெண்கள் கிரிக்கெட் உலகளவில் பெரும் வளர்ச்சி கண்டு வரும் நிலையில், பல வீராங்கனைகள் தங்களது விளையாட்டு வாழ்க்கையின் போதே குடும்ப வாழ்க்கையையும் தொடங்க விரும்புகின்றனர்.
அவர்களின் உடல்நலம் மற்றும் மனநலனைப் பாதுகாக்கும் வகையில், பாதுகாப்பாக மீண்டும் கிரிக்கெட் விளையாட்டிற்குத் திரும்புவதற்கு ‘6 Rs’ என்ற 6 நிலைகளைக் கொண்ட கட்டமைப்பு இதில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வழிகாட்டு நெறிமுறைகளின்படி, வீராங்கனைகளுக்கு நெகிழ்வான பயிற்சிச் சூழல், குழந்தை பராமரிப்பு ஆலோசனைகள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் குழந்தைகளுக்கு உணவளிப்பதற்கான பிரத்யேக இடங்கள் போன்ற நடைமுறை வசதிகளை ஏற்படுத்தித் தர உறுப்பு நாடுகளுக்கு ஐசிசி அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து ஐசிசி தலைவர் ஜெய் ஷா கூறுகையில், “எந்தவொரு வீராங்கனையும் தாய்மை அல்லது நாட்டின் பிரதிநிதித்துவம் ஆகிய இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படக் கூடாது. வீராங்கனைகளின் நலனைப் பாதுகாத்து, அவர்களின் திறமைகளைத் தக்கவைப்பதே எங்களின் முக்கிய நோக்கம்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், பிரசவத்திற்குப் பின் விளையாட்டிற்குத் திரும்பி, தற்போது 2026 உலகக் கிண்ணத் தொடரில் விளையாடி வரும் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வீராங்கனை அஃபி பிளெட்சர் (Afy Fletcher), இந்த நெறிமுறைகள் பெண் கிரிக்கெட்டிற்கு ஐசிசி செய்த மிகச்சிறந்த காரியம் எனப் பாராட்டியுள்ளார்.
பெண் வீராங்கனைகள் மைதானத்திற்குள்ளும், மைதானத்திற்கு வெளியேயும் சிறந்து விளங்க ஐசிசி எடுத்துள்ள இந்த ஆரோக்கியமான முயற்சி, எதிர்காலத் தலைமுறை வீராங்கனைகளுக்கு பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது.

