தற்போதைய பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் கல்வி எதிர்காலத்தை வளப்படுத்துவதற்காக, கொழும்பு பெரிய பள்ளிவாசல் விசேட இலவச கல்வித் திட்டமொன்றை ஆரம்பித்துள்ளது.
இலவசக் கல்வியின் ஊடாக அடுத்த தலைமுறையை ஆதரிப்போம் எனும் தொனிப்பொருளில், கொழும்பு பெரிய பள்ளிவாசலின் நம்பிக்கையாளர் சபையினரால் இந்த உன்னத திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மாணவர்களிடையே கல்வியில் ஆர்வத்தை ஏற்படுத்துவதையும், அவர்களை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்ட இவ்வகுப்புகள், வார இறுதி நாட்களிலும் வாரநாட்களின் மாலை வேளைகளிலும் முற்றிலும் இலவசமாக நடத்தப்பட்டு வருகின்றன. அனுபவமும் திறமையும் வாய்ந்த சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு பாடங்கள் கற்பிக்கப்படுகின்றமை இதன் சிறப்பம்சமாகும்.
இக்கல்வித் திட்டத்தின் கீழ் தரம் 6, 7, 8 மற்றும் 9 ஆகிய வகுப்புகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு சிங்களம், தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதம் ஆகிய முக்கிய பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.

எவ்வித இன, மத வேறுபாடுகளுமின்றி அனைத்து சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களும் இதில் கலந்துகொள்வதற்குக் களம் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, ஆரம்பிக்கப்பட்ட குறுகிய காலத்திற்குள்ளேயே 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் இவ்வகுப்புகளில் தங்களைப் பதிவுசெய்து கல்வியைத் தொடர்ந்து வருகின்றனர்.
இந்த இலவச கல்வித் திட்டம் தொடர்பான விளக்கமளிக்கும் ஆரம்ப நிகழ்வு, கொழும்பு பெரிய பள்ளிவாசலின் தலைவர் தாஹிர் ரஸீன் தலைமையில் பள்ளிவாசலின் ஹமீதியா மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பெருந்திரளான மாணவர்களும் பெற்றோர்களும் கலந்துகொண்டனர்.

இதன்போது நிர்வாக சபை உறுப்பினர் நவாஸ்டீன் வரவேற்புரையாற்ற, பாடநெறிகள் குறித்த அறிமுக உரைகளை ஆசிரியர்களான அனஸ் அசுபர், பிர்ஸாட் அனஸ் ஆகியோர் வழங்கினர்.
அதனைத் தொடர்ந்து, மாணவர்களுக்குக் கற்பிக்கவுள்ள ஆசிரியர்களான அனஸ் அசுபர், திருமதி தயாளினி, இஹ்லாஸ் குஸைன், திருமதி சுமையா பாயிஸ், திருமதி பாத்திமா முஸ்னியா மற்றும் பிர்ஸாட் அனஸ் ஆகியோர் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர்.

நிகழ்வின் நிறைவாக, பாடநெறிப் பொறுப்பாளர் சாதிக் ஜவ்பர் நன்றியுரையை நிகழ்த்தினார். பொருளாதாரச் சுமையினால் பிள்ளைகளின் கல்விக்கான மேலதிக வகுப்புக் கட்டணங்களைச் செலுத்த முடியாமல் தவிக்கும் பெற்றோருக்கு, கொழும்பு பெரிய பள்ளிவாசலின் இந்த இலவசக் கல்விச் சேவை பெரும் பக்கபலமாக அமைந்துள்ளதாகப் பெற்றோர்கள் பலரும் தங்களது நன்றியினைத் தெரிவித்துள்ளனர்.


