திருகோணமலை, குச்சவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கும்புறுப்பிட்டி, கொம்பன்குளம் காட்டுப் பகுதியில் புதைக்கப்பட்டிருந்த பெருமளவிலான வெடிபொருட்கள் மற்றும் ஆயுதப் பாகங்களை திருகோணமலை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மீட்டுள்ளனர்.
கடந்த ஜூன் 18 ஆம் திகதி மாலை, குற்றப் புலனாய்வுப் பிரிவு நிலையப் பொறுப்பதிகாரி பி.ஓ.பி.சமரசிங்கவுக்கு கிடைத்த இரகசியத் தகவலின் பேரில் இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
மீட்கப்பட்ட ஆயுதங்கள்:
யுத்தக் காலத்தில் பயன்படுத்தப்பட்டு, பின்னர் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் இந்த ஆயுதப் பாகங்கள், காப்புக்காட்டுப் பகுதியில் பீப்பாயொன்றில் உரப்பையினுள் இட்டு புதைக்கப்பட்டிருந்தன. மீட்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் துருப்பிடித்த நிலையில் காணப்பட்டன.
அங்கிருந்து மீட்கப்பட்டு குச்சவெளி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட பொருட்கள்:
டி-56 (T-56) ரக தோட்டாக்கள் – 08
பிஸ்டல் தோட்டாப் பைகள் – 03, உறை – 01, தோட்டாக்கூடு – 01
கிளைமோர் கம்பிகள் (30 மீட்டர்) மற்றும் மின்கலங்கள் (Batteries) – 04
நீதிமன்ற உத்தரவிற்காக காத்திருப்பு:
அங்கிருந்து கண்டெடுக்கப்பட்ட சுமார் 2.5 கிலோ எடை கொண்ட 01 கிளைமோர் குண்டு மற்றும் 02 மிதிவெடிகளள என்பன, குச்சவெளி சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்தின் உத்தரவு பெறப்படும் வரை பாதுகாப்பு காரணங்களுக்காக கண்டெடுக்கப்பட்ட இடத்திலேயே பலத்த பொலிஸ் பாதுகாப்பிற்கு மத்தியில் வைக்கப்பட்டுள்ளன.
இச்சம்பவம் தொடர்பில் திருகோணமலை பிராந்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் குச்சவெளி பொலிஸாரும் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


