வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்படும் வீட்டுவசதி மேம்பாட்டுத் திட்டங்களின் முன்னேற்றத்தை ஆய்வு செய்து, மக்களுக்கு விரைவான நிவாரணங்களை வழங்கும் நோக்கில் சிறப்பு கலந்துரையாடல் தொடர் ஒன்று நடைபெற்றது.

இக்கலந்துரையாடல்கள் வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் பிரதி அமைச்சர் டி.பி. சரத் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க ஆகியோரின் தலைமையில் வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்ட செயலகங்களில் இடம்பெற்றன.
இங்கு, ‘டித்வா’ (Ditwa) சூறாவளி காரணமாக வீடுகளை இழந்த மற்றும் சேதமடைந்த குடும்பங்களுக்கான வீடமைப்பு மற்றும் இழப்பீடு வழங்கும் வேலைத்திட்டங்களை விரைவுபடுத்துவது குறித்து விசேட அவதானம் செலுத்தப்பட்டது.

வவுனியா மாவட்டத்தில் சூறாவளியினால் சேதமடைந்த 669 வீடுகளுக்காக 181 மில்லியன் ரூபா பணம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், அந்தப் பணத்தை பயனாளிகளுக்கு தாமதமின்றி வழங்குவதற்கு உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
அத்துடன், வவுனியா வீரபுரம் பகுதியில் உள்ள 70 குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு புதிய வீடுகளை அமைப்பதற்காக, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் வழங்கப்படும் தலா ஒரு மில்லியன் ரூபா வீடமைப்பு கடனுதவியை வழங்குவதற்கும் தேவையான அனுமதி கிடைத்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 200 ஏழைக் குடும்பங்களுக்கு புதிய வீட்டுத்திட்டத்தை ஆரம்பிப்பதற்காக 200 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டதுடன், கோகிலாய் பகுதியில் உள்ள 270 மீனவக் குடும்பங்களுக்கான புதிய வீட்டுத் தொகுதியை அமைப்பதற்கான முன்மொழிவும் கலந்துரையாடப்பட்டது.
“ஒவ்வொரு குடும்பத்திற்கும் பாதுகாப்பான வீடு” என்ற அரசாங்கத்தின் தொலைநோக்கு பார்வைக்கு அமைய, வன்னி மக்களின் வீட்டுத் தேவைகளை நிவர்த்தி செய்து, நிலையான மற்றும் கண்ணியமான வாழ்க்கை நிலையை ஏற்படுத்துவதற்காக இந்த வேலைத்திட்டங்கள் முன்னெடுத்துச் செல்லப்படுவதாக இங்கு வலியுறுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ். திலகநாதன் மற்றும் எம். ஜெகதீஸ்வரன், வவுனியா மாவட்ட செயலாளர் பி.ஏ. சரத்சந்திர, முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் ஏ. உமாமகேஸ்வரன் மற்றும் வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


