கொழும்பு மாவட்ட மீனவ சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் கண்டறிந்து, அவற்றுக்கு நிரந்தர தீர்வுகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு “கொழும்பு மாவட்ட கடற்றொழில் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்”, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்களின் தலைமையில் நேற்று (16) கொழும்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இதில் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் நிப்புண ஆராச்சி அவர்களும் கலந்துகொண்டார்.
இதன்போது, பிரதி அமைச்சர் விசேட கொள்கை ரீதியான தீர்மானமொன்றை அறிவித்ததுடன், கரையோரப் பகுதிகளில் எந்தவொரு பயன்பாடும் இன்றி கைவிடப்பட்டுள்ள பொதுக் கட்டடங்களை உடனடியாக அடையாளங்கண்டு, அவற்றை மீனவ சமூகத்தின் மேம்பாட்டிற்காக முன்னேற்றகரமான வகையில் பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். குறித்த கட்டடங்களைப் புனரமைத்து, கடற்றொழில் சங்க அலுவலகங்கள், மீன் விற்பனை நிலையங்கள் அல்லது சமூக சேவை நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவதற்கு கடற்றொழில் அமைப்புகள் தீவிரமாக தலையிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்தக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட ஏனைய முக்கிய பிரச்சினைகளும் தீர்வுகளும் பின்வருமாறு:
1. அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்கள் மற்றும் நீரேரி ஆக்கிரமிப்பு : மொரட்டுவ மற்றும் அதனைச் சூழவுள்ள கரையோரப் பகுதிகளில் இடம்பெறும் அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்கள் காரணமாக கடற்றொழில் நடவடிக்கைகளுக்கு ஏற்படும் தடைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது. இது தொடர்பாக, கடற்கரைப் பாதுகாப்புத் திணைக்களமும் அளவைத் திணைக்களமும் இணைந்து எல்லைகளை நிர்ணயித்து, உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் அறிவுறுத்தினார்.
2. கழிவகற்றல் முகாமைத்துவம் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடு : நீரேரிகள் மற்றும் கடற்கரைகளில் கழிவுகளைக் கொட்டுவதைத் தடுப்பதற்காக, உள்ளூராட்சி மன்றங்களுடன் இணைந்து முறையான வேலைத்திட்டமொன்றைத் தயாரிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது.
3. உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு : கடற்றொழில் இறங்குதுறைகளைச் சார்ந்துள்ள கழிவறைகள், குழாய் நீர் மற்றும் மின்சாரம் போன்ற அடிப்படைத் தேவைகளை விரைவாகப் பூர்த்தி செய்து கொடுப்பதற்கும் இதன்போது இணக்கம் காணப்பட்டது.
4. கடற்றொழிலாளர்களின் பாதுகாப்பு : கடலுக்குச் செல்லும்போது உயிர்காப்பு அங்கிகளை (Life Jackets) அணிவதைக் கட்டாயமாக்குவதற்கும், கடற்றொழில் தகவல் தொடர்பு அமைப்புகளைச் சீராகப் பராமரிப்பதற்கும் அதிகாரிகளுக்கும் கடற்றொழில் சங்கங்களுக்கும் அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டன.

இதன்போது உரையாற்றிய பிரதி அமைச்சர், கடற்றொழில் துறை என்பது நாட்டின் உற்பத்திப் பொருளாதாரத்தின் ஒரு முக்கிய அங்கமாக இருப்பதன் காரணமாக அதிகாரிகள் மற்றும் கடற்றொழில் சமூகத்தினருக்கு இடையே சிறந்த ஒருங்கிணைப்பைப் பேணி, நிலவும் நிர்வாகத் தடைகளை நீக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர, நாடாளுமன்ற உறுப்பினர் சமன்மலி குணசிங்க, மொரட்டுவ மேயர் கே.டி. நிஷாந்த பெர்னாண்டோ மற்றும் மாவட்டச் செயலாளர் கினிகே பிரசன்ன ஜனக குமார, கடற்றொழில் அமைச்சு மற்றும் திணைக்களங்களின் உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.



