ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருந்த முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவிற்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த நான்கு வழக்குகளின் தீர்ப்பு அறிவிப்பை ஜூன் மாதம் 09 ஆம் திகதி வரை ஒத்திவைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு இன்று (26) கொழும்பு மேல் நீதிமன்ற நீதியரசர் மொஹமட் மிஹைல் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் சரண குணவர்தனவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த நான்கு வழக்குகளின் தீர்ப்பும் இன்றைய தினம் வௌியிடப்படவிருந்து.
எனினும், குறித்த வழக்குகள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, வழக்குகளின் தீர்ப்புகள் இன்னும் தயாராகவில்லை என நீதியரசர் அறிவித்தார்.
இதற்கமைய, தீர்ப்பின் அறிவிப்பை ஜூன் மாதம் 09 ஆம் திகதி மேற்கொள்வதாக நீதியரசர் உத்தரவிட்டார்.
2006 ஆம் ஆண்டில் தேசிய லொத்தர் சபையின் தலைவராகப் பணியாற்றிய போது, அந்த நிறுவனத்திற்கு வாடகை அடிப்படையில் வாகனங்களைப் பெற்றுக்கொண்டதன் மூலம் அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படுத்தியதாகக் குற்றம் சுமத்தி, முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
