கொழும்பின் வெள்ளக் கட்டுப்பாடு மற்றும் வீட்டுத் திட்டங்கள் குறித்து ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு

0
26

நகர அபிவிருத்தி அதிகார சபையினால் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பாக அவற்றின் முன்னேற்றம் மற்றும் நடைமுறை சவால்களை ஆராயும் நோக்கில், அதன் அதிகாரிகளுடன் இன்று (18) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.

இதன்போது, நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு இந்த ஆண்டிற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியை, நடப்பு நிதியாண்டிற்குள் முழுமையாகவும் பயனுள்ளதாகவும் பயன்படுத்த வேண்டிய அவசியம் வலியுறுத்தப்பட்டது.

மேலும், பல நிறுவனங்கள் இணைந்து செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் கலந்துரையாடி இறுதி முடிவுகளை எடுப்பதன் முக்கியத்துவம் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. அத்துடன், திட்டங்களை செயல்படுத்துதல் மற்றும் பராமரித்தல் போன்ற நடவடிக்கைகளில் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் தெளிவான பொறுப்புகளை வழங்குவது அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

களனி கங்கை தொடர்பான வெள்ளக் கட்டுப்பாட்டு திட்டம் உள்ளிட்ட கொழும்பு நகரின் நீர் முகாமைத்துவ திட்டங்கள், பேர வாவி அபிவிருத்தித் திட்டம் மற்றும் இரத்மலானை, மொரட்டுவை உள்ளிட்ட கொழும்பு புறநகர் பகுதிகளில் குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கான வீடமைப்பு சிறப்பு திட்டங்களின் தேவை பற்றியும் விரிவாக ஆராயப்பட்டது.

மேலும், மேற்கண்ட வேலைத்திட்டங்களை திறம்பட முன்னெடுத்து கண்காணிப்பதற்காக சிறப்பு முகாமைத்துவ மாதிரி ஒன்றை அறிமுகப்படுத்த வேண்டிய தேவையும் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here