திறைசேரியில் $2.5 மில்லியன் திருட்டு? சபாநாயகரின் ஒரு மாத மௌனம் குறித்து வழக்கறிஞர்கள் சாடல்

0
13

திறைசேரியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் 2.5 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி மோசடி தொடர்பாக முறையான பாராளுமன்ற விசாரணை நடத்தக் கோரி சபாநாயகருக்கு அனுப்பப்பட்ட கடிதத்திற்கு ஒரு மாதமாகியும் பதில் அளிக்கப்படவில்லை என சுதந்திர வழக்கறிஞர்கள் அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ சுற்றறிக்கைகள் மற்றும் நடைமுறைகளை மீறி சபாநாயகர் மௌனம் காத்துவருவது, சம்பவத்துடன் தொடர்புடைய ஆதாரங்கள் அழிக்கப்படவோ அல்லது மறைக்கப்படவோ வாய்ப்பளிப்பதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியின் சட்ட ஆலோசகர் மைத்ரி குணரத்ன கையொப்பமிட்ட விசேட கடிதமொன்றின் மூலம் இந்த குற்றச்சாட்டுகள் மீண்டும் சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பான முதல் கடிதம் 2026 ஏப்ரல் 22 ஆம் திகதி அனுப்பப்பட்டிருந்த போதிலும், அதற்கான பெறுபதி உறுதிப்படுத்தப்படாததுடன், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், சம்பந்தப்பட்ட ஆவணங்களை சமர்ப்பிக்க ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டதன் மூலம், சந்தேகநபர்களுக்கு சாட்சியங்களை மாற்றியமைக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும், இதற்காக பாராளுமன்ற நிதிக் குழுவும் பொறுப்பேற்க வேண்டும் என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பொதுக் கணக்குக் குழு தனது கடமைகளை உரிய முறையில் மேற்கொள்ள தவறியுள்ளதாகவும், கடந்த மாதம் தொடர்ந்து நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்ற ஜனாதிபதி, இந்த விவகாரம் வெளிப்பட்ட பின்னர் அவைக்கு வராதிருப்பதும் கேள்விகளை எழுப்புவதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலைமை காரணமாக பொதுநிதி அமைப்பின் மீதான மக்கள் மற்றும் முதலீட்டாளர்களின் நம்பிக்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ரூபாயின் மதிப்பிழப்பு மற்றும் அந்நியச் செலாவணிக்கான கள்ளச்சந்தை வலுப்பெறுதல் போன்ற விளைவுகள் ஏற்பட்டுள்ளதாகவும் அமைப்பு எச்சரித்துள்ளது.

அரசியலமைப்பின் 148வது பிரிவின் கீழ் நாடாளுமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ள நிதி அதிகாரங்களை பயன்படுத்தி, இந்த விவகாரம் தொடர்பாக உடனடி மற்றும் சுயாதீனமான பாராளுமன்ற விசாரணை ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று சுதந்திர வழக்கறிஞர்கள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here