“உழைக்கும் மக்களின் உரிமைகளே நாட்டின் முன்னேற்றத்தின் அடித்தளம்” –ஜீவன் தொண்டமான்

0
54

நாட்டின் வளர்ச்சிக்கும், தனிநபர் முன்னேற்றத்திற்கும் உழைக்கும் அனைத்து தொழிலாளர் மக்களுக்கும் இனிய மே தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார் இ.தொ.கா பொதுச்செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான்.

அவரது மே தின வாழ்த்து செய்தியில், இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் வகிக்கும் முக்கிய பங்கினை சிறப்பித்ததோடு, தலைநகரம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் தமது வாழ்க்கை முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்புடன் உழைக்கும் மக்களுக்கும் தனது மே தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இலங்கை சுதந்திரத்திற்கு பின்னரான வரலாற்றை நினைவுகூர்ந்த அவர், நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தொழிலாளர் வர்க்கத்தின் பங்களிப்பு இன்றியமையாததாக இருந்து வந்துள்ளதாக சுட்டிக்காட்டினார். அந்த அடிப்படையில், உழைக்கும் மக்களின் நலன்களும் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம் என வலியுறுத்தினார்.

மேலும், “மனிதகுல வரலாறு என்பது வர்க்கப் போராட்டங்களின் வரலாறே” என கூறிய காரல் மார்க்ஸ் அவர்களின் கருத்தை மேற்கோள் காட்டிய அவர், 1886 ஆம் ஆண்டு அமெரிக்காவின் சிகாகோ நகரில் தொழிலாளர்கள் முன்னெடுத்த வரலாற்றுப் போராட்டத்தை நினைவுகூர்ந்தார்.

அந்தப் போராட்டத்தின் மூலம் “8 மணி நேர வேலை, 8 மணி நேர ஓய்வு, 8 மணி நேர உறக்கம்” என்ற கோரிக்கை உலகளவில் முன்னிறுத்தப்பட்டதையும், தொழிலாளர்களின் உரிமைக்கான போராட்டத்தில் பலர் உயிரிழந்ததையும் அவர் நினைவுகூர்ந்தார். இந்த வரலாற்றுப் போராட்டத்தின் விளைவாகவே ஆண்டுதோறும் மே 1 ஆம் திகதி உலகம் முழுவதும் மே தினம் அனுசரிக்கப்படுகிறது எனவும் குறிப்பிட்டார்.

தொழிலாளர் உரிமைகள் மீறப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தாம் தொழிற்சங்கத் தலைவராக உறுதியான குரல் கொடுத்துள்ளதாக தெரிவித்த அவர், எதிர்காலத்திலும் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க தொடர்ந்து செயல்படுவேன் என்ற உறுதியையும் ஜீவன் தொண்டமான் வெளிப்படுத்தினார்.

இறுதியாக, இன்றைய மே தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் உழைக்கும் மக்களுக்கு தனது இதயம் கனிந்த மே தின வாழ்த்துகளை மீண்டும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here